Entertainment
முதல்வர் ஸ்டாலினுடன் எம்.எல்.ஏ ரோஜா சந்திப்பு
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, ஆந்திரா எம்எல்ஏ-வும், நடிகையுமான ரோஜா, அவரது கணவரும், திரைப்பட இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது, முதல்வரின் உருவம் பொறித்த சால்வையை இருவரும் பரிசாக வழங்கினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் ரோஜா கூறியதாவது: எனது நகரி தொகுதி தமிழக எல்லையில் இருப்பதால், தொகுதி தொடர்பான விஷயங்களை முதல்வரிடம் தெரிவித்தோம். நான் அளித்த மனுவைப் படித்துவிட்டு, விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தெரிவித்தார்.
எனது தொகுதியில் தமிழ்வழிப் பள்ளிகள் உள்ளன. அவை மெட்ரிக் கல்வித் திட்டத்தின்கீழ் வருகின்றன. அதற்காக 1 முதல் 10-ம் வகுப்பு வரை 1,000 தமிழ்ப் பாடப் புத்தகங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை அனுப்பி வைப்பதாக முதல்வர் உறுதியளித்தார்.
திருத்தணி விஜயபுரம் பகுதிதமிழக எல்லையில் அமைந்துள்ளது. இங்கு தொழிற்பேட்டைக்காக 5,600 ஏக்கர் நிலத்தை ஆந்திர தொழில் உட்கட்டமைப்புக் கழகம் ஆர்ஜிதம் செய்துள்ளது. இந்த தொழிற்பேட்டைக்கு இணைப்பு சாலை அமைப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இந்த சாலை அமைக்கப்பட்டால் தமிழகத்தில் இருந்து கனரக வாகனங்கள் எளிதில் வரமுடியும். தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி நீண்ட நாட்களாகிவிட்டதால், முதல்வரிடம் கோரிக்கை விடுத்தேன். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
மேலும், நகரி, நெல்லூர், சத்தியவேடு, சித்தூர் பகுதிகளில் இருந்து தமிழ் தெரிந்த நோயாளிகள் பலரும் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். அவர்களுக்கு சில நேரம் சிகிச்சை அளிக்க மறுக்கப்படுகிறது. இதுகுறித்து முதல்வரிடம் தெரிவித்தபோது, கரோனா காலகட்டம் முடிந்ததும், உரிய வசதிகளை செய்வதாக முதல்வர் உறுதியளித்தார்.
என் கணவர் செல்வமணி, தென்னிந்திய நெசவாளர் சங்கத் தலைவராக உள்ளார். இங்கு வேலையின்றி நெசவாளர்கள் பரிதவித்து வருகின்றனர். நெசவுத் தொழில் மேம்பாட்டுக்காக அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் குறிப்பிட்ட தொகையை வழங்கி, ஆதரவு அளிக்கலாம். இவ்வாறு ரோஜா கூறினார்.
