எந்த வார்த்தை சொன்னாலும் அதற்கு ஒரு கவுண்டர், அதுவும் எகத்தாளத்தோடு நக்கலாக. இதுவே வெறும் மணியாக இருந்தவரை கவுண்டமணியாக மாற்றிய தன் பின்னணி. கிட்டத்தட்ட 40 வருட அனுபவம் தமிழ் சினிமாவில். இவருடன் இணைந்து நடிக்காத முன்னனிகளே கிடையாது.
வயது வித்தியாசமின்றி நடித்த படத்தில் எல்லாரையும் கலாய்த்து தள்ளியவர் கவுண்டமணி. இவரது நையாண்டிக்கு ஆளானவர்களில் ரஜினிகாந்த், கமலஹாசன் கூட விதிவிலக்கு கிடையாது. அதிலும் சத்யராஜுடன் இவர் சேர்ந்துவிட்டால் மஜா தான்.
“சூரியன்” படத்தில் அரசியல்வாதியாக வரும் இவர் அடித்த லூட்டியை இன்று நினைத்தாலும் சிரிப்பை தானாக வரவழைத்துவிடும். ‘பன்னிக்குட்டி’ ராமசாமி என்பதுதான் படத்தில் இவரது பெயர்.
கார்த்தி பக்கா ஜென்டில்மேனாக வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்தவரை திடீரென அழைத்த அமீர் படத்தில் நடிக்க வேண்டும் என சொல்ல, அவரும் அதை தட்டாமல் நடித்துக் கொடுத்தார்.

ஏதோ ஹிட் ஆகும் என நினைத்தார்கள் ஆனால் இப்படி ஒரு ஹிட் ஆகும் என்று இவர்களே நினைத்து இருப்பார்களா என்று யோசிக்க வைத்த படம் “பருத்திவீரன்”. நடிப்பில் காட்டிய முதிர்ச்சி முதல் படமா இவருக்கு இது என ஆச்சரியத்தை வரவழைத்தது சிவகுமாரின் மகன் சூர்யாவின் தம்பி என்ற அடையாளங்கள் அழிந்து போனது “பருத்திவீரன்” படத்தால்.
“சிறுத்தை’, “பையா”, “பொன்னியின் செல்வன்” என பெயர் சொல்ல வைத்த வெற்றி படங்கள். நேற்று பெயரிடப்பட்ட “மெய்யழகன்” என இது நாள் வரை தமிழ் சினிமாவில் வெற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார் கார்த்தி.
கவுண்டமணிக்கும், கார்த்திக்கும் உள்ள ஒரு ஒற்றுமை என்னவென்றால் இவர்கள் இருவருக்கும் இன்று பிறந்த தினம். இருவரின் பிறந்த தினத்தை அவரவர் ரசிகர்கள் தனித்தனியே மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். இருவருக்கும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.