“மேதை” படம் வெளியாகி 12 ஆண்டுகளுக்கு பிறகு ராமராஜனை வெள்ளித்திரையில் பார்த்துள்ளனர் அவரது ரசிகர்கள். ‘மதுர மரிக்கொழுந்து வாசம்’ பாடல் பின்னனியில் இசைக்கப்பட ராமராஜன் தோன்றுகிறார் திரையில். “வெள்ளி விழா நாயகன்”, “கிராமத்து நாயகன்” என இவரது பட ரிலீசுக்காக காத்திருந்தவர்களின் ஏக்கத்தை போக்கிவிட்டார் “சாமானியன்” மூலம் என்றே சொல்லலாம்.
ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் ராமராஜனுடன் கூட்டணி போட்டு வங்கிக்கு செல்கின்றனர் கொள்ளையடிக்க. பால் சொம்பை கையிலும் , கிரககுடத்தை தலையிலும் சுமந்து சாந்தமாக வந்தவர் கையில் ரிவால்வர், கண்களில் கொடூர கோபம், இது ஏன்? என்பதை சொல்கிறது படம்.
வங்கி கொள்ளை கதைகள் என்றாலே நினைவில் வருவது சில வருடங்களுக்கு முன்னர் பாக்யராஜின் “ருத்ரா”வும், சமீபத்தில் அஜீத் “துணிவு”டன் அடித்த கொள்ளையும் தான். இந்த இரண்டு படங்களில் “ருத்ரா” கொள்ளை காட்சியில் நகைச்சுவை இருந்ததால் அது அதிக கவனம் பெற்றிருந்தது. “துணிவு” திரைக்கதை சொதப்பல் வேகம் குறைவு என நிறைய மைனஸ்களுடன் வந்ததாக விமர்சிக்கப்பட்டது.
ஆனால் திரைக்கதையால் இந்த இருவரையும் பின்னுக்கு தள்ளிவிட்டார் “சாமானியன்”. இப்படி சொல்வது வேறு யாருமல்ல சமீபத்தில் ஷகீலாவிடம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வாங்கிக்கட்டி கொண்டு வந்த ‘பயில்வான்’ரெங்கநாதனே தான். படத்தை பற்றிய தனது விமர்சனத்தில் இந்த கருத்தை பிரதானப்படுத்தியிருக்கிறார்.
இளையராஜாவின் இசை பெரிய அளவில் எடுபடவில்லையாம். எத்தனை ஆண்டுகள் கழித்து வந்தாலும் நடிப்பில் நான், நான் தான் என நிரூபித்துவிட்டாராம் ராமராஜன். இதுவும் பயில்வான் தனது விமர்சனத்தில் கொடுத்துள்ள ஸ்டேட்மென்ட். இவர் சொன்னது போல சாமானியன் நன்றாகயிருப்பதாகத்தான் பார்த்தவர்கள் சொல்லியும் வருகிறார்கள்.