நடிகர் ரவி மோகனின் (Ravi Mohan) மனைவி ஆர்த்தி (Aarti) தொடர்ந்த அவதூறு வழக்கில், பாடகி கெனிஷா (Kenishaa) வருகிற டிசம்பர் 3-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வரும் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ஆகியோரின் விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே, ரவி மோகனுடன் பாடகி கெனிஷா நெருக்கமாக இருப்பதாகவும், அவரைத் தனது தோழி என ரவி மோகன் கூறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், தன்னைப் பற்றிச் சமூக வலைதளங்களில் கெனிஷா அவதூறாகப் பதிவிட்டதாகக் கூறி ஆர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், ஏற்கெனவே சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அவதூறுப் பதிவுகளை நீக்க வேண்டும் எனவும் ஆர்த்தி கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கில் பதிலளிப்பதற்காகப் பாடகி கெனிஷா டிசம்பர் 3-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது.













