ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஒரு நாள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் குடிகாரர்கள் பொறுக்கமாட்டாமல் டாஸ்மாக் கடை முன்னர் கூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4,00,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் 600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
ஊரடங்கை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் குடிமகன்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஒருநாள் மட்டுமே முடிந்துள்ள நிலையில் டாஸ்மாக் முன்னர் மக்கள் கூட்டமாகக் கூடியுள்ளனர். அங்கு வந்த போலிஸ்காரர் அவர்களை கலைந்து போக சொல்ல கூட்டம் அசையவில்லை. மேலும் ஒரு இளைஞர் கல்லை எடுத்து டாஸ்மாக் ஷட்டரை அடித்து உடைக்க முயற்சிக்கிறார். அதைப் பலரும் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பரப்பியுள்ளனர். ஒருநாள் மட்டுமே முடிந்துள்ள நிலையில் இன்னும் 20 நாட்களை எப்படி கடக்கப்போகிறார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது.







