தமிழ் சினிமா மற்றும் தனது சினிமா அனுபவங்கள் குறித்து பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் யார் என்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, இயக்குனர் வெற்றிமாறனின் பெயர் உடனடியாக வெளிவந்தது. அவரது அனைத்து படங்களையும் தான் விரும்பிப் பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, தமிழ் சினிமாவில் யாருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, தனக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றும் யாருடன் வேண்டுமானாலும் பணிபுரிய தயார் என்றும் அவர் பதிலளித்துள்ளார்.
இதற்கிடையில், புகழ்பெற்ற பழம்பெரும் நடிகையும் தனது தாயுமான ஸ்ரீதேவியின் திரைப்படங்களில் தமக்கு மிகவும் பிடித்த படம் எது என்ற சுவாரசியமான கேள்விக்கு ஜான்வி கபூர் பதிலளித்தார். அம்மா ஸ்ரீதேவியின் நடிப்பில் உருவான ‘மூன்றாம் பிறை’ படம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்ட அவர், அந்தப் படத்தைப் பார்த்த பிறகு தம்மால் சில நாட்களுக்குத் தாயாரிடம் பேசவே முடியவில்லை என்ற உண்மையை உடைத்தார்.
அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் அதில் ஸ்ரீதேவி பட்ட கஷ்டங்களைக் கண்டு சிறுவயதில் தான் மிகவும் மன உளைச்சலுக்கும் அதிர்ச்சிக்கும் ஆளானதாக ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். நிஜ வாழ்க்கையிலும் தனது தாயை அந்த கதாபாத்திரத்தின் நிலையோடு குழப்பிக்கொண்டு, அவர் மீதுள்ள கோபம் மற்றும் வருத்தம் காரணமாகவே சில நாட்கள் அவருடன் பேசாமல் இருந்ததாக அவர் வெளிப்படையாகக் கூறியுள்ள சுவாரசியமான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.













