நீண்ட இடைவெளிக்குப் பிறகு தான் தமிழில் நடித்துள்ளதாகவும், இப்படத்தில் ஒவ்வொருவரும் மிகச்சிறப்பாக உழைத்துள்ளதாகவும் நடிகர் மம்மூட்டி தெரிவித்துள்ளார். இயக்குநர் ராஜ்குமார் பெிரியாசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘OM’. இப்படத்தில் மம்மூட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வரும் நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய நடிகர் மம்மூட்டி, படப்பிடிப்பு அனுபவங்களை கலகலப்பான முறையில் பகிர்ந்து கொண்டார். தான் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளதாகவும், தற்போது தனுசுடன் பணியாற்றியுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், அடுத்து தனுஷின் மகனுடன் எப்போது நடிப்பது என்று தெரியவில்லை என நகைச்சுவையாகக் கூறினார். மேலும், ‘பேரன்பு’ படத்திற்குப் பிறகு பலரிடம் வாய்ப்புக் கேட்டதாகவும், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல தமிழ் படத்தில் இணைந்துள்ளது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
படம் குறித்து பேசுகையில், இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தாலும் படத்தின் உண்மையான பலம் அதன் கதை தான் என்று மம்மூட்டி குறிப்பிட்டார். திட்டமிட்டபடி 45 நாட்களில் முடிக்கப்பட வேண்டிய ஷூட்டிங், இரவு நேர படப்பிடிப்புகள் காரணமாக ஆறு மாதங்கள் நீடித்ததாகக் கூறிய அவர், கடத்தல்காரர்களின் கதையாக இருப்பதால் இரவில்தான் படமாக்க முடியும் என்று இயக்குனர் தரப்பில் கூறப்பட்டதாக சுவாரசியமான தகவலைப் பகிர்ந்து கொண்டார்.
இதனிடையே, நடிகை சாய் பல்லவியின் அர்ப்பணிப்பையும் அவரது சண்டைக் காட்சிகளையும் மம்மூட்டி வெகுவாகப் பாராட்டினார். பொதுவாக படங்களில் நாயகர்கள்தான் சண்டைக்காட்சிகளில் தீவிரமாக ஈடுபடுவார்கள் என்றும், ஆனால் சாய் பல்லவி இப்படத்தில் புரூஸ் லீ போல சண்டையிடுவதைப் பார்த்தால் ஹீரோக்களே தோற்றுவிடுவார்கள் என்றும் அவர் புகழ்ந்தார். மேடையில் தனது பேச்சு ஜாலியாக இருந்தாலும், இப்படம் பார்வையாளர்களை சிலிர்க்க வைக்கும் அளவுக்கு மிகவும் சீரியஸான மற்றும் உணர்ச்சிகரமான ஒரு கதைக்களத்தைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.













