தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காதல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படங்களின் பட்டியலில் தளபதி விஜய், ஜோதிகா நடிப்பில், எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் வெளியான ‘குஷி’ (Khushi) திரைப்படத்திற்கு எப்போதும் தனி இடமுண்டு. பிரபல தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் தயாரித்த இப்படம் வெளியாகி மாபெரும் வெள்ளி விழா வெற்றி பெற்றது. இந்நிலையில், ‘குஷி’ திரைப்படம் உருவான விதம் மற்றும் வெளியீட்டின் போது நடந்த பல சுவாரசியமான ரகசியங்களைத் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் தற்போது பகிர்ந்துள்ளார்.
ஆரம்பத்தில் மும்பையில் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவைச் சந்தித்த ஏ.எம். ரத்னம், நடிகர் பிரபுதேவாவை வைத்து ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கவே திட்டமிட்டிருந்தார். ஆனால், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் தேதிகள் கிடைக்காததால் அந்தத் திரைப்படம் தள்ளிப்போனது. அதன்பிறகு, எஸ்.ஜே. சூர்யா கூறிய ‘குஷி’ படத்தின் ஒரு வரிக்கதை ஏ.எம். ரத்னத்தை மிகவும் கவர்ந்தது.

அந்த காலகட்டத்தில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த விஜய்க்கு இந்தக் கதை சரியாக இருக்கும் எனக் கருதிய அவர்கள், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரை அணுகி விஜய்யிடம் கதை சொல்ல ஏற்பாடு செய்தனர். கதை கேட்டபோது விஜய் எந்தவொரு ரியாக்ஷனும் காட்டாமல் அமைதியாக இருந்ததால் படக்குழுவினர் குழப்பமடைந்தனர். ஆனால், பின்னர் தனது தந்தையிடம் பேசுமாறு கூறி படத்தில் நடிக்க சம்மதித்த விஜய், தனது ரசிகர்களுக்காகச் சண்டைக் காட்சிகளைச் சேர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
படம் முடிந்து சென்னை உதயம் திரையரங்கில் முதல் பிரிவியூ காட்சி திரையிடப்பட்டபோது, ஸ்பீக்கர் கோளாறு காரணமாகப் படம் மோனோ சவுண்டில் (Mono Sound) ஒலித்தது. இதனால் பிரிவியூ பார்த்தவர்கள் படம் சுமாராக இருப்பதாகக் கூற, விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கத் தயங்கினர். உடனே துணிச்சலான முடிவெடுத்த ஏ.எம். ரத்னம், தானே படத்தைச் சொந்தமாக வெளியிடத் தீர்மானித்தார். வெளியான முதல் நாள் காலை காட்சியில், விஜய் மற்றும் ஜோதிகா இடையேயான புகழ்பெற்ற லவ்-லெட்டர் காட்சிக்குத் திரையரங்கமே அதிர்ந்ததைப் பார்த்த ரத்னம், படம் நிச்சயம் வெற்றி பெறும் என எஸ்.ஜே. சூர்யாவிடம் நம்பிக்கையுடன் கூறினார்.
மேலும், படத்தின் ஆரம்பத்தில் குழந்தைப் பருவக் காட்சிகள் நீளமாக இருந்ததால் கதாநாயகியின் அறிமுகம் தாமதமாவதை உணர்ந்த ரத்னம், இயக்குநரின் சம்மதத்துடன் சுமார் 500 அடி காட்சிகளை உடனடியாக நீக்கினார். இதனால் ‘மேகம் கருக்குது’ பாடலும் ஜோதிகாவின் அறிமுகமும் முன்கூட்டியே வந்து படத்தின் வேகத்தை அதிகரித்தது. ஆரம்பத்தில் சந்தேகங்களுடன் தொடங்கிய ‘குஷி’, இறுதியில் வெள்ளி விழா கொண்டாடிய வரலாற்று வெற்றியாக மாறியது.













