பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் திரைப்படம் ‘ஜென்டில்மேன்’. ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் 1993-ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் முதல் வாரத்திலேயே திரையரங்குகளில் மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் கிடைத்த இந்த பிரம்மாண்ட வரவேற்பைத் தொடர்ந்து, தெலுங்கு திரையுலகிலும் இப்படத்திற்குப் பெரிய எதிர்பார்ப்பு உருவானது. அந்த சமயத்தில் இப்படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையைத் தான் வாங்கிய சுவாரசியமான பின்னணியைப் பிரபல தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் தற்போது பகிர்ந்துள்ளார்.
அந்த காலகட்டத்தில் தமிழ்ப் படங்களின் தெலுங்கு டப்பிங் உரிமை என்பது அதிகபட்சமாக 35 லட்சம் ரூபாயைத் தாண்டியதே இல்லை. ஆனால், ‘ஜென்டில்மேன்’ படத்தைப் பார்த்த ஏ.எம். ரத்னம், அதன் பிரம்மாண்டத்தையும் கதைக்களத்தையும் உணர்ந்து தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோனிடம் நேரடியாக 60 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய குஞ்சுமோன், இறுதியில் 76 லட்சம் ரூபாய்க்கு தெலுங்கு உரிமையை இறுதி செய்துள்ளார். அதுவரை யாரும் நினைத்துப் பார்க்காத இந்தத் தொகையைக் கேட்டு ராம் கோபால் வர்மா மற்றும் டி. ராமாநாயுடு போன்ற தெலுங்கு சினிமா ஜாம்பவான்களே ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
படத்தை வெறுமனே டப்பிங் செய்து வெளியிடாமல், அது ஒரு நேரடி தெலுங்குப் படம் போன்ற உணர்வை ரசிகர்களுக்குத் தர வேண்டும் என்பதில் ஏ.எம். ரத்னம் மிகுந்த கவனம் செலுத்தினார். குறிப்பாக, படத்தின் விறுவிறுப்பான கிளைமாக்ஸ் சைக்கிள் சேஸிங் காட்சியில் இடம்பெற்ற தமிழ் பேனர்களை நீக்கிவிட்டு, தெலுங்கு பேனர்களை வைத்து சுமார் 35 ஷாட்களைப் பிரத்யேகமாக மீண்டும் படமாக்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி, பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்த ‘சிக்கு புக்கு ரயிலே’ உட்படப் படத்தின் அனைத்துப் பாடல்களுக்கும் அவரே தெலுங்கில் பாடல் வரிகளையும் எழுதியுள்ளார். ஏ.எம். ரத்னத்தின் இந்த அர்ப்பணிப்பையும் நேர்த்தியான உழைப்பையும் கண்டு இயக்குநர் ஷங்கரே வியந்து பாராட்டியதாக அந்தப் பேட்டியில் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.













