தமிழ் சினிமா வரலாற்றில் எவ்வித வசனங்களும் இன்றி உருவாக்கப்பட்டு உலகளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘பேசும் படம்’ (தெலுங்கில் ‘புஷ்பக்’). கடந்த 1987-ஆம் ஆண்டு இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் இந்திய சினிமாவில் ஒரு புதிய மைல்கல்லாக அமைந்தது. இந்நிலையில், இத்திரைப்படம் குறித்து திரையுலகையே நெகிழ வைக்கும் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சுமார் 30 முதல் 50 லட்சம் ரூபாய் வரையிலான குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தின் முழுமையான நெகட்டிவ் உரிமைகளை (Negative Rights), உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ரூ.3 கோடி கொடுத்து அதிகாரப்பூர்வமாக வாங்கியுள்ளார். நிதி நெருக்கடியில் தவித்து வந்த இப்படத்தின் தயாரிப்பாளர் குடும்பத்திற்கு உதவும் வகையிலும், அவர்களின் சுயமரியாதையைக் காக்கும் விதமாகவும் கமல்ஹாசன் இந்த நிதியுதவியை வழங்கி நெகட்டிவ் உரிமைகளைக் கைப்பற்றியுள்ளார்.
சினிமாவைத் தாண்டித் தனது படங்களை உருவாக்கிய தயாரிப்பாளர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் கமல்ஹாசன் செய்துள்ள இந்த செயல் திரையுலகில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மேலும், தன்னுடைய நடிப்பில் வெளியாகி, தற்போது நிதிப் பிரச்சினையில் இருக்கும் தயாரிப்பாளர்களின் பிற படங்களின் நெகட்டிவ் உரிமைகளையும் வாங்கிப் பாதுகாக்கும் திட்டத்தில் கமல்ஹாசன் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.













