தமிழ் சினிமாவின் மறக்க முடியாத கூட்டணிகளில் ஒன்றான பிரபுதேவா (Prabhu Deva) மற்றும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் (A.R. Rahman) ஆகியோர் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள ‘மூன்வாக்’ (Moonwalk) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் மனோஜ் என்.எஸ் (Manoj NS) எழுதி இயக்கியுள்ள இப்படம், கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
காமெடி, குடும்ப உணர்வுகள், இசை மற்றும் நடனம் ஆகியவை நிறைந்த முழுநீள குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘மூன்வாக்’ உருவாகியுள்ளது. இதில் பாபூட்டி (Babootty) என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரபுதேவா, பல நகைச்சுவையான சிக்கல்களில் மாட்டிக்கொள்வது போல டிரெய்லர் காட்சிகள் கலகலப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
பிரபுதேவாவுடன் யோகி பாபு (Yogi Babu), சாட்ஸ் (Satz), மலையாள நடிகர்கள் அஜு வர்கீஸ் (Aju Varghese), அர்ஜுன் அசோகன் (Arjun Ashokan), சுஷ்மிதா (Sushmitha), ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யோகி பாபுவின் டைமிங் காமெடி வசனங்களும், பிரபுதேவாவின் துள்ளலான நடன அசைவுகளும் டிரெய்லருக்குப் பெரும் பலம் சேர்த்துள்ளன.
View this post on Instagram
இந்தப் படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமாக, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்ததுடன், முதன்முறையாகத் திரையில் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். படப்பிடிப்புத் தளத்தில் கோபக்கார இயக்குநராகத் தோன்றும் ஏ.ஆர். ரஹ்மான், பிரபுதேவாவின் நடனத் திறமையைக் கலாய்க்கும் காட்சி டிரெய்லரில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் (Behindwoods Productions) நிறுவனம் தயாரித்துள்ள ‘மூன்வாக்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, டிசம்பர் 24 திரையரங்க வெளியீட்டிற்குப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.













