நடனப் புயல் பிரபுதேவா மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரின் பிரம்மாண்டக் கூட்டணி பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘மூன்வாக்’ (Moonwalk). அறிமுக இயக்குநர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கத்தில், முழு நீள குடும்ப நகைச்சுவைப் பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் தற்போது உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர். அதன்படி, வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
முன்னதாக தீபாவளி வெளியீட்டிற்குத் திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை நாட்களில் குடும்பங்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து திரையரங்குகளில் சிரித்து மகிழும் வகையில் டிசம்பர் 24-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், ரெடின் கிங்ஸ்லி, நிஷ்மா செங்கப்பா மற்றும் சுஷ்மிதா நாயக் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
View this post on Instagram
குறிப்பாக, இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருப்பதோடு, ஒரு முக்கிய கௌரவத் தோற்றத்திலும் நடித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இசை, நடனம் மற்றும் கலகலப்பான நகைச்சுவை ஆகியவை சரிவிகிதத்தில் கலந்து உருவாக்கப்பட்டுள்ள ‘மூன்வாக்’ திரைப்படம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் முழுமையான திரையரங்கக் கொண்டாட்டமாக அமையும் எனப் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.













