தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் ஹாரர்-காமெடி பாணியில் தனி கவனம் ஈர்த்து வரும் நடிகர் சந்தானம் (Santhanam) நடித்துள்ள புதிய திரைப்படம் ‘லவ் பைட்’ (Love Bite). இத்திரைப்படம் வருகிற டிசம்பர் 18-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.
‘கான்ஜுரிங் கண்ணப்பன்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் (Selvin Raj Xavier) எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் (AGS Entertainment) நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர். சந்தானத்திற்கு ஜோடியாக அபர்ணா தாஸ் (Aparna Das) முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஜாம்பி (Zombie) பின்னணியை மையமாக வைத்து, திகில் மற்றும் நகைச்சுவை அம்சங்களுடன் கலகலப்பான திரைக்கதையாக ‘லவ் பைட்’ உருவாக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் விடிவி கணேஷ், ஆனந்த்ராஜ், ராஜேந்திரன், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
View this post on Instagram
கடந்த மே மாதம் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது. ஒளிப்பதிவை யுவாவும், படத்தொகுப்பை பிரதீப் இ. ராகவும் மேற்கொண்டுள்ளனர்.
ஜாம்பி கலாட்டாவுடன் நகைச்சுவை விருந்தாக வரவிருக்கும் ‘லவ் பைட்’ திரைப்படம், டிசம்பர் 18 வெளியீட்டை முன்னிட்டு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.













