இந்தியத் திரையுலகின் வெற்றிகரமான கூட்டணிகளில் ஒன்றான நடிகர் தனுஷ் (Dhanush) மற்றும் பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல். ராய் (Aanand L. Rai) ஆகியோர் நான்காவது முறையாக மீண்டும் இணையவுள்ளதாக பாலிவுட் திரையுலக வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இவர்களது கூட்டணியில் வெளியான ‘ராஞ்சனா’ (Raanjhanaa), ‘அத்ரங்கி ரே’ (Atrangi Re) மற்றும் ‘தேரே இஷ்க் மெயின்’ (Tere Ishk Mein) ஆகிய மூன்று திரைப்படங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றன.
தற்போது இந்த ஹிட் கூட்டணி நான்காவது முறையாக ஒரு பிரம்மாண்டமான ரொமான்டிக் பீரியட் ஆக்ஷன் டிராமா (Romantic Period Action Drama) திரைப்படத்திற்காகக் கைகோர்க்க உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த காலப் பின்னணியில் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகளுடன் உருவாகவுள்ள இப்படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தனுஷ் மற்றும் ஆனந்த் எல். ராய் ஆகிய இருவருமே இதுவரை இணைந்து முயற்சிக்காத ஒரு புதிய கதைக்களமாகவும், சவாலான ஜானராகவும் இப்படம் அமையவுள்ளது. காதல் உணர்வுகளுடன் கூடிய அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான ஸ்டண்ட் காட்சிகள் இப்படத்தின் முக்கிய சிறப்பம்சமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளைத் தத்ரூபமாகவும் சர்வதேசத் தரத்திலும் வடிவமைக்க, உலகப் புகழ்பெற்ற ஜெர்மானிய ஆக்ஷன் இயக்குநர் ஸ்டீபன் ரிக்டர் (Stefan Richter) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘டான் 2’, ‘கிக்’, ‘உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’, ‘சாஹோ’ மற்றும் ‘ஷிவாய்’ உள்ளிட்ட பல பிரம்மாண்டப் படங்களில் பணியாற்றிய இவரது வருகை, இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்குப் புதிய பரிமாணத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதார்த்தமான சண்டைக் காட்சிகளையும் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகளையும் சமநிலையில் இணைத்து உருவாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு, வருகிற 2027-ஆம் ஆண்டின் மத்தியில் தொடங்கும் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.













