கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு நாளை மாலை முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை தமிழகத்தின் அனைத்து மாநில எல்லைகளும் மூடப்படுகின்றன.
உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 400 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
மத்திய அரசு இந்தியாவில் கொரோனா பரவ அதிகவாய்ப்பு உள்ள 80 மாவட்டங்களை பட்டியலிட்டுள்ளது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே இந்த மூன்று மாவட்டங்களையும் மற்ற மாவட்டங்களில் இருந்து தனிமைப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தமிழகம் முழுவதும் நாளை மாலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும். அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் தவிர கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் பொது இடங்களில் கூடவும், ஐந்து பேருக்கு மேல் சேர்ந்து நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.







