தமிழ் சினிமாவில் ஃபேன்டசி, ஹாரர் மற்றும் நகைச்சுவை ஆகிய மூன்றும் கலந்த வித்தியாசமான கதைக்களத்துடன் உருவான ‘ட்ரோன்ஸ்’ (Drones) திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ‘பன் பட்டர் ஜாம்’ படத்தை இயக்கிய ஆர். ராகவ் மிர்தாத் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி மற்றும் திராவிட் செல்வம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் குரைஷி, சினிமாவாலா சதீஷ், ஆர்.ஜே. தீபக் மற்றும் சசி செல்வராஜ் உள்ளிட்ட பலரும் நகைச்சுவை கலந்த வேடங்களில் நடித்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், வித்தியாசமான கற்பனைக் கதைக்காகப் பாராட்டுகளைப் பெற்ற நிலையில், நவம்பர் 20 முதல் அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகத் தொடங்கியுள்ளது. கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட மூன்று மாணவர்கள், ஒரு விஞ்ஞானியின் வீட்டில் தஞ்சம் புகும்போது அங்குள்ள மினியேச்சர் கலைஞர் மற்றும் ஒரு மந்திரவாதியுடன் சிக்கிக்கொண்டு சந்திக்கும் சுவாரசியமான சாகசங்களே இப்படத்தின் கதைக்களமாகும்.
ஜி.எம். மோர்கன் தயாரிப்பில் ஹரி எஸ்.ஆர் இசையமைத்துள்ள இப்படம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 இந்திய மொழிகளிலும் இப்படம் வெளியிடப்பட்டுள்ளதால், அனைத்து மொழி ரசிகர்களும் இதனைத் தங்கள் இல்லங்களில் இருந்தபடியே கண்டு ரசிக்கலாம்.













