தமிழ் சினிமாவின் மூத்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான மீசை ராஜேந்திரன், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவம் குறித்துப் பகிர்ந்துள்ளார். இது திரையுலக வட்டாரத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீசை ராஜேந்திரன் தனது பேட்டியில் குறிப்பிட்டதாவது: “ஒருமுறை நான் AVM ஸ்டுடியோவில் டப்பிங் வேலைகளுக்காகச் சென்றிருந்தபோது, அங்கு நடிகர் வடிவேலுவைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் என்னிடம், ‘நாளை காலை 7 மணிக்கு T.R. கார்டனுக்கு படப்பிடிப்பிற்கு வாருங்கள்’ என்று அழைப்பு விடுத்தார். மேலும், அங்கிருந்த இயக்குநரிடம் தொலைபேசியில் பேசி, என்னைத் தேநீர் கடைக் காட்சியில் நடிக்க வைக்குமாறும் பரிந்துரைத்தார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியுடன் மறுநாள் காலை 7 மணிக்கே குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றேன்.”
“ஆனால், காலை 8 மணி ஆகியும் எனக்கு மேக்கப் போடப்படவில்லை. மாறாக, தேநீர் கடைக் காட்சியில் என்னக்குப் பதிலாக நடிகர் பெசன்ட் நகர் ரவி நடிக்க வைக்கப்பட்டார். காலை 9 மணி உணவு இடைவேளையின்போது, அமர்ந்திருந்த வடிவேலுவிடம் சென்று, ‘நீங்கள்தானே என்னை அழைத்தீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அங்கிருந்த அனைவர் முன்பும் வடிவேலு, ‘நீங்களெல்லாம் விஜயகாந்த்தின் ஆட்கள். இங்கே உங்களுக்கு வேலை கிடைக்காது’ என்று பகிரங்கமாகக் கூறினார். இந்த வார்த்தைகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. மற்ற கலைஞர்கள் முன்பே என்னை அவமானப்படுத்துவது போல அவர் நடந்து கொண்டார்,” என்று ராஜேந்திரன் உருக்கமாகக் கூறினார்.
இந்தச் சம்பவம் குறித்து மீசை ராஜேந்திரன் மேலும் கூறுகையில், “அவமானத்தால் கோபம் அடைந்த நான், வடிவேலுவிடம் ‘என்னை நீங்கள் தான் அழைத்தீர்கள். இதுபோல எந்த ஒரு கலைஞனையும் நடத்தாதீர்கள்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினேன். மறுநாள் நான் கேப்டன் விஜயகாந்தின் அலுவலகத்திற்குச் சென்று நடந்த அனைத்தையும் விளக்கினேன். இதைக் கேட்ட விஜயகாந்த் கடும் கோபம் அடைந்தார். ‘இவ்வளவு பேர் முன்னால் உன்னை அவமானப்படுத்தினார்களா? அப்போதே நீ எதாவது திருப்பிச் செய்திருக்க வேண்டும். நான் உன்னைப் பாதுகாத்திருப்பேன்’ என்று வடிவேலுவின் செயலைக் கடுமையாகக் கண்டித்தார். அந்த இக்கட்டான நேரத்தில் அவர் எனக்குப் பக்கபலமாக நின்று ஆதரவு அளித்தார்,” என்று மீசை ராஜேந்திரன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.













