இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களும் இன்று நாடு திரும்பியிருக்கிறார்கள். ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 21 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அத்துமீறி மீன்பிடித்ததாக கூறி நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்பறையினர் அவர்களை கைது செய்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இது குறித்து கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 21 மீனவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
அவர்களின் பயண ஆவணங்களை இந்திய தூதரக அதிகாரிகள் ஏற்பாடு செய்த பிறகு வெள்ளிக்கிழமை இரவு ஏர் இந்தியா விமான மூலம் 21 மீனவர்களும் இன்று சென்னை வந்தடைந்துள்ளனர். சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த தமிழக மீனவர்களை தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊருக்கு செல்ல தேவையான போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்தார்கள்.







