பிளாஸ்டிக் பாட்டில்களை போட்டால் மாஸ்க் கிடைக்கும் வகையில் நவீன இயந்திரத்தை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.
தமிழக அரசு தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைப்பதற்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிளாஸ்டிக் பைகள் உபயோகிப்பதை தடுப்பதற்காக ஐந்து ரூபாய் செலுத்தினால் மஞ்சப்பை கிடைக்கும் வகையில் இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.
இதன் தொடர்ச்சியாக தற்போது பிளாஸ்டிக் பாட்டில்களை மக்கள் பொது இடங்களில் போடாமல் தடுப்பதற்காக ஒரு புதிய இயந்திரத்தை கொண்டு வந்துள்ளது. பொதுவாக மருத்துவமனை மற்றும் பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை குடித்துவிட்டு அதை அப்படியே போட்டு விட்டு செல்கிறார்கள். இதனால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றது.
அதை தடுக்கும் வகையில் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் புதிய இயந்திரம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு இந்த இயந்திரத்தை மருத்துவமனை நிர்வாகத்தில் வைத்திருக்கின்றது. இந்த இயந்திரத்தில் காலி பாட்டில்களை போட்டால் போதும் அதில் உள்ள சென்சார் மூலம் முக கவசம் இலவசமாக கிடைக்கும்.
சோலார் முறையில் இயங்கும் இதில் 300 பிளாஸ்டிக் பாட்டில்கள் சேமிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஒரு முறை 500 முகாம்சம் வரையில் வைக்க முடியும். குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வருபவர்கள் ஆர்வத்துடன் இந்த இயந்திரத்தில் காலி பாட்டில்களை போட்டு முக கவசத்தை பெற்று செல்கிறார்கள்.