மனதளவில் பாதிக்கப்பட்ட பெண் தலையில் 77 ஊசிகளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலமாக நீக்கி இருக்கும் சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஒடிசா மாநிலத்தின் போலாங்கிர் பகுதியை சேர்ந்த ரேஷ்மா. 19 வயதான இவருக்கு அடிக்கடி உடல்நல பாதிக்கப்பட்டு வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவரின் தாயார் உயிரிழந்தார். அதன் பிறகு தான் இவர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு மந்திரவாதி ஒருவரை சந்தித்திருக்கின்றார்.
ஒரு சில ஆண்டுகள் எந்த பிரச்சினையும் இல்லாமல் இவர் வாழ்ந்து வந்துள்ளார். திடீரென்று தலையில் வலி தாங்க முடியாமல் பீமா பாய் என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் தலையில் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது அவரின் தலையில் ஊசிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அறுவை சிகிச்சை செய்து ரேஷ்மாவின் தலையில் இருந்து முதற்கட்டமாக எட்டு ஊசிகள் நீக்கப்பட்டன. அதையடுத்து அவரது உடலின் எந்தவித மாற்றமும் இல்லாததால் வீர் சுரேந்திர சாய் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனையில் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்து தலையிலிருந்து மட்டும் மொத்தம் 77 ஊசிகள் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமுடன் இருந்து வருகின்றார்.
நல்லவிதமாக இந்த ஊசிகள் எதுவும் தலையில் எலும்பு பகுதிகளை சேதப்படுத்தவில்லை. மாறாக தசை பகுதியில் மட்டும் லேசான காயத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இது குறித்து அவர் தெரிவித்ததாவது “தாயின் மறைவுக்குப் பிறகு மனதளவில் மிக பாதிக்கப்பட்டேன். உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மந்திரவாதியிடம் சென்ற போது அவர் தொடர்ந்து ஊசிகளை எனக்கு ஏற்றி விட்டார்”. இதனை கேட்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மந்திரவாதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.







