ஹரியானாவில் பாஜக வெற்றி பெற்றதற்கு பிறகு ஜிலேபி வைத்து ராகுல் காந்தியை கலாய்த்து வருகிறார்கள்.
அரியானாவில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக அங்கு ஆட்சி அமைக்கின்றது. தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 37 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. நேற்றைய தினம் நடந்த வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்தில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் கட்சி பின்னர் பின்னடைவை சந்தித்தது. பாஜக தற்போது தனது வெற்றியை கொண்டாடி வருகின்றது.
இந்நிலையில் இனிப்பு பலகாரமான ஜிலேபி இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. பாஜகவினர் பெட்டி பெட்டியாக ஜிலேபியை வாங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஜிலேபியை குறிப்பிட்டு அவர்கள் தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய காரணம் காங்கிரசை வெறுப்பேற்றுவதற்கு தான். தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி அரியானாவில் பிரத்தியேகமாக தயார் செய்யப்படும் மாதுராம் ஜிலேபி குறித்து பேசி இருந்தார்.
பிரசித்தி பெற்ற மாதுராம் ஜிலேபிகளை நாம் நாட்டின் மற்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். அப்படி செய்தால் அரியானாவில் வேலை வாய்ப்பு உயரும் என்ற திட்டத்தை தேர்தல் பிரச்சாரத்தில் முன் வைத்திருந்தார். மற்ற ஜிலேபிகளை விட அதிக நாட்கள் நீடிக்கக் கூடிய இந்த ஜிலேபிகளின் தயாரிப்பை அதிகப்படுத்தும் போது நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை மாதுராம் பகுதியில் வேலை வாய்ப்பை அதிகரிக்க முடியும் என்று அவர் பேசியிருந்தார்.
இதனை கிண்டல் செய்த பாஜக தலைவர்கள் மாதுராம் ஜிலேபிகள் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் ராகுல் காந்தி இதை பற்றிய அடிப்படை புரிதல் இல்லாமல் பேசி வருகிறார் என்று கூறியிருந்தார்கள். இந்நிலையில் மீண்டும் பாஜக காங்கிரஸை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளதால் ஜிலேபிகளை பாஜகவினர் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். பாஜக ஊழியர்கள் ஒவ்வொரு காங்கிரஸ் அலுவலகத்திற்கு சென்று ஜிலேபி பெட்டிகளை டெலிவரி செய்த சம்பவமும் அரங்கேறி இருக்கின்றது.