தமிழ் சினிமாவில் நட்பு, கிரிக்கெட் மற்றும் கலகலப்பான நகைச்சுவையை மையமாக வைத்து வெளியாகி கல்ட் கிளாசிக் அந்தஸ்தைப் பெற்ற திரைப்படம் ‘சென்னை 600028’ (Chennai 28). இயக்குநர் வெங்கட் பிரபுவுக்குப் பெரிய திருப்புமுனையைக் கொடுத்த இந்தத் திரைப்படத்தின் மூன்றாம் பாகமான ‘சென்னை 28 பார்ட் 3’ (Chennai 28 Part 3) குறித்துப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபுவின் அடுத்த இயக்கமாக உருவாகவுள்ள இப்படத்தின் 70 சதவீதப் படப்பிடிப்பைத் தாய்லாந்தில் (Thailand) நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. சென்னையில் குறுகிய காலப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, பாங்காக் உள்ளிட்ட தாய்லாந்து நகரங்களில் பிரம்மாண்டமாகப் படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்த ஃபிரான்சைஸ் படங்களின் பட்ஜெட் வளர்ச்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 2007-ஆம் ஆண்டு வெளியான முதல் பாகம் சுமார் ₹3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து 2016-ஆம் ஆண்டு தேனியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இரண்டாம் பாகம் ₹12 கோடி பட்ஜெட்டில் உருவானது.
இந்நிலையில், ‘சென்னை 28 பார்ட் 3’ திரைப்படம் சுமார் ₹43 கோடி என்ற பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் பாகத்தை விடப் பல மடங்கு அதிக பட்ஜெட்டிலும், வெளிநாட்டுப் பின்னணியிலும் உருவாகவுள்ளதால், பழைய நண்பர்கள் கூட்டணியின் கலாட்டா இம்முறை சர்வதேச அளவில் இருக்கும் என ரசிகர்கள் உற்சாகத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.













