இந்திய கிரிக்கெட் உலகின் ‘புத்திசாலி’ என்று அழைக்கப்படும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு புதிய இன்னிங்ஸை இன்று தொடங்குகிறார். ஐபிஎல் 2026 (IPL 2026) தொடருக்கான அதிகாரப்பூர்வ வர்ணனையாளர் குழுவை ஜியோ ஸ்டார் (JioStar) நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் சிஎஸ்கே (CSK) ரசிகர்களின் ஃபேவரைட் வீரரான அஸ்வின் முதல் முறையாக வர்ணனையாளராகப் பங்கேற்க உள்ளார். 2025 ஐபிஎல் சீசனோடு ஓய்வு பெறுவதாக அறிவித்த அஸ்வின், தற்போது மைதானத்திற்கு வெளியே இருந்து தனது நுணுக்கமான கிரிக்கெட் அறிவைப் பகிர்ந்து கொள்ளத் தயாராகிவிட்டார்.
அஸ்வினுடன் இணைந்து வீரேந்தர் சேவாக், ஏபி டி வில்லியர்ஸ், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் மற்றும் பாப் டூ பிளெசிஸ் போன்ற ஜம்பவான்களும் வர்ணனை செய்ய உள்ளனர். குறிப்பாக அஸ்வின் மற்றும் ரெய்னா ஆகிய இரு சிஎஸ்கே ஜம்பவான்களையும் ஒரே ஸ்டுடியோவில் பார்ப்பது சென்னை ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக அமையப் போகிறது. ஜியோ ஸ்டார் நிறுவனம் இந்த ஆண்டு 12 மொழிகளில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளது. இதில் தமிழ், ஆங்கிலம், இந்தி மட்டுமல்லாமல் போஜ்புரி, பஞ்சாபி போன்ற மொழிகளும் அடங்கும்.
இந்த ஆண்டு ரசிகர்களுக்கு மற்றொரு சிறப்பம்சமாக ‘MaxView’ மற்றும் ‘Multi-cam’ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் ஸ்டம்ப் கேமரா, பேட்டர் கேமரா என தங்களுக்குப் பிடித்த கோணத்தில் போட்டியை ரசிக்கலாம். வர்ணனையாளர் குழுவில் ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்களும் இடம்பெற்றுள்ளனர். அஸ்வினின் கதைகூறும் பாணியும், ஆட்டத்தின் போக்கை முன்கூட்டியே கணிக்கும் திறனும் இந்த ஐபிஎல் சீசனை இன்னும் சுவாரஸ்யமாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வரும் திங்கட்கிழமை (மார்ச் 30) நடைபெற உள்ள சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது அஸ்வினின் வர்ணனையைக் கேட்க ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலோடு காத்திருக்கிறது. சிஎஸ்கே-வில் இருந்து டிரேடு மூலம் சஞ்சு சாம்சன் இணைந்தது ஒரு பக்கம் இருக்க, அஸ்வின் வர்ணனையாளராக வந்தது ரசிகர்களுக்கு இந்த சீசனில் ஒரு ‘டபுள் ட்ரீட்’ ஆக அமைந்துள்ளது.













