ஆந்திராவைச் சேர்ந்த எம் எல் ஏ ஒருவர் காவலர் ஒருவரின் காலில் விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,00,000 ஐ நெருங்கி வருகிறது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 50,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்போது அதிகமானப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற நாடுகளை விட இந்தியாவில் குறைவானப் பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 2000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கை முறையாகக் கடைபிடிக்க, காவல்துறையினர் கடுமையாக உழைத்து வருகின்றனர். அதே நேரத்தில் வெளியே வரும் மக்களைப் போலிஸார் பல இடங்களில் துன்புறுத்தும் வீடியோக்களும் வெளியாகி விமர்சனங்களை எழுப்பியுள்ளன.
இந்நிலையில் ஆந்திராவில் காவலர் ஒருவரின் காலில் எம் எல் ஏ செட்டி பால்குனா விழுந்து வணங்கியது வைரலாகி வருகிறது. இவர் ஆளும் கட்சியான ஒய் எஸ் ஆர் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. காவலர்களின் உழைப்பை பாராட்டும் விதமாக அவ்வாறு அவர் செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.







