50 வருடங்களுக்கும் மேலாக தமிழ்த்திரையுலகை ஆட்சி செய்த பாடகர் எஸ்.பி.பி கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட்டில் எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த எஸ்.பி.பி இன்று காலமானதாக அவரது மகன் எஸ்.பி.பி சரண் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தொடர் மருத்துவம் பார்த்தும் ரசிகர்கள் கடும் கூட்டு பிரார்த்தனை செய்தும் அவர் உயிர் இழந்தது அவரது ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியது.
சாந்தி நிலையம் படத்தில் இடம்பெற்ற இயற்கை என்னும் இளைய கன்னி என்ற பாடலின் மூலம் எஸ்.பி.பி அறிமுகமானார்.
அந்தக்கால எம்.ஜி.ஆர் முதல் பல தலைமுறைகள் கடந்த தனுஷ் வரை எஸ்.பிபியின் குரல் அழகாக பொருந்தும். குறிப்பாக ரஜினி, கமலுக்கு அவரது குரல் மிக அழகாக பொருந்தும்.
இசைஞானி இளையராஜாவும் இவரும் நெருங்கிய நண்பர்கள் இளையராஜாவின் இசையில்தான் எஸ்.பி.பி அதிக பாடல்கள் பாடியுள்ளார். எஸ்.பிபி ஒரு இசையமைப்பாளரும் கூட, சிகரம், துடிக்கும் கரங்கள் உள்ளிட்ட படங்களுக்கு சிறப்பாக இசையமைத்து அருமையான பாடல்களையும் பாடியுள்ளார். இவர் பாடிய நமசிவாய பாடல் பெரும் புகழ் பெற்றது ஆன்மிக விரும்பிகளால் பெரிதும் கேட்கப்படுவது. இவரது குரலுக்கு வயது வித்தியாசமின்றி ரசிகர்கள் உள்ளனர்
இவர் பாடிய மண்ணில் இந்த காதலன்றி பாடலை மூச்சு விடாமல் பாடி இருப்பார், சங்கீத ஜாதி முல்லை, சங்கீத மேகம், இதோ இதோ என் பல்லவி, என எத்தனையோ சாதனை பாடல்களை பாடியுள்ளார் அவற்றை அளவிட முடியாது ஒரு கோப்பைக்குள் அடைக்க முடியாது.
கேளடி கண்மணி, மனதில் உறுதி வேண்டும், திருடா திருடா உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் இவர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் 40000 பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்தவர் இவர். இந்த மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே என்று சங்கீத மேகம் பாடலில் பாடிய எஸ்.பிபியின் மரணம் ரசிகர்களை கடும் வேதனையில் மீளா துயரில் ஆழ்த்தியுள்ளது
அவரது உடல் தாமரைப்பாக்கம் என்ற இடத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு எடுத்து செல்லப்பட உள்ளதாக தெரிகிறது. கொரோனா பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறப்படும் நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் தகுந்த வழிகாட்டுதலை காண்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.









