புதுக்கோட்டையைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் ஒருவர் மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 13,00,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் 4300 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 120 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் நாடெங்கும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இரண்டு நாட்கள் மட்டுமே முடிந்துள்ளது.
இந்நிலையில் அதற்குள் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை உடைத்து அத்திமீறி நுழைந்து மதுபாட்டில்களை திருட முயற்சி செய்துள்ளனர். மேலும் மது கிடைக்காத மன உளைச்சலில் தமிழகத்திலும் கேரளாவிலும் சில இடங்களில் தற்கொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வசித்து வந்த லாரி ஓட்டுநர் கருப்பையா சாலையோர மரத்தில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்ததால் மதுவுக்கு அடிமையானவர் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே புதுக்கோட்டையில் மது கிடைக்காததால் வார்னிஷைக் கலந்து குடித்து மூன்று பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.







