திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என்று தான் ஒருபோதும் கூறவில்லை என்றும், வாழ்க்கையில் சரியான நபருடன் அர்த்தமுள்ள உறவை ஏற்படுத்திக்கொள்ளவே விரும்புவதாகவும் நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார். திருமணம் என்ற பெயருக்காக மட்டும் ஒரு உறவில் இணைய விரும்பவில்லை என்றும், தனது சுதந்திரத்தையும் தனித்துவத்தையும் மதிக்கும் ஒருவர்தான் வாழ்க்கைத் துணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சமீபத்தில் கோபிநாத் நடத்திய பாட்காஸ்டில் பங்கேற்ற நித்யா மேனன், தனது தனிப்பட்ட வாழ்க்கை, திருமணம் மற்றும் உறவுகள் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். திருமணம் குறித்து தான் முன்பு தெரிவித்த கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகக் கூறிய அவர், திருமணத்துக்கு எதிரானவர் என்ற அடையாளம் தனக்கு வழங்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், “நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று சொன்னபோது, திருமணமே வேண்டாம் என்றும் அதற்கு எதிரானவள் என்றும் பலரும் நினைத்துவிட்டனர். ஆனால், எனது நோக்கம் அதுவல்ல. எனக்கும் திருமணம் செய்துகொள்ள விருப்பம் இருக்கிறது. எனக்கு என்ன வேண்டும் என்பது தெளிவாகத் தெரியும். வெறும் திருமணம் அல்ல; சரியான நபருடன் சரியான உறவைத்தான் விரும்புகிறேன். அதனால் பெயருக்காக மட்டும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். எனது சுதந்திரத்தை மதிக்காத ஒருவராக இருந்தால், அப்படிப்பட்ட திருமணம் எனக்குத் தேவையில்லை” என்று கூறியுள்ளார்.
சுதந்திரத்தைப் பறிக்கும் உறவுகளிலிருந்து விலகினேன்!
தனது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலான உறவுகளில் இருந்து விலகிய அனுபவங்களையும் நித்யா பகிர்ந்துகொண்டார். குறிப்பாக, ஒருவரின் ஆதிக்கம் மற்றொருவரை முழுமையாகக் கட்டுப்படுத்தும் உறவுகள் ஆரோக்கியமானவை அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.
“ஒரு உறவில் நமது மனதுக்கும் சுதந்திரம் இல்லாமல் போகும் சூழலில் இருந்து வெளியேறுவது மிகவும் கடினம். சில உறவுகளில் மற்றொருவரின் ஆதிக்கம் நம்மைச் சுற்றி இறுக்கமாகப் பிடிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். துணையை மூச்சுத்திணறச் செய்யும் அளவுக்கு கட்டுப்படுத்தும் மனிதர்களும் இருக்கிறார்கள். அத்தகைய சூழலில் இருந்து விலகுவது பயத்தால் எடுக்கப்படும் முடிவு அல்ல; அது ஒரு புரிதலால் எடுக்கப்படும் முடிவு” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அப்படிப்பட்ட உறவுகளில் இருந்து வெளியேறிய பிறகு ஏற்பட்ட அனுபவம் குறித்துப் பேசிய அவர், மீண்டும் சுதந்திரமாக மூச்சுவிடுவது போன்ற உணர்வு கிடைத்ததாகவும், தனக்காக ஒரு புதிய உலகம் திறந்தது போன்ற நிம்மதி ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
சவால்களை எதிர்கொள்வது குறித்தும் பகிர்ந்த நித்யா
சிறு வயது முதலே தனக்கு கூச்ச சுபாவம் அதிகம் என்றும், மற்றவர்கள் தன்னை உற்றுப் பார்ப்பது கூட சில நேரங்களில் அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்றும் நித்யா தெரிவித்துள்ளார். பொதுவெளியில் அனைவரின் கவனத்துக்கும் மத்தியில் இருப்பது தனக்கு எளிதான விஷயமல்ல என்றும் கூறியுள்ளார்.
ஆனால், இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ளும்போது தன்னைப் பற்றிப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏன் அசௌகரியமாக உணர்கிறோம், அதற்குப் பின்னால் என்ன காரணம் இருக்கிறது என்று தன்னைத்தானே கேள்வி கேட்டு ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், விவேக் ஓபராயுடன் இணைந்து நித்யா மேனன் நடித்துள்ள ஹிந்திப் படமான ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் கிரே’ (Mr. and Mrs. Grey) விரைவில் வெளியாகவுள்ளது. அங்குர் பஜ்னி, விஷால் ரஞ்சன் மிஸ்ரா இயக்கியுள்ள இந்தப் படம் டிசம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.













