தமிழ் சினிமாவில் ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘எனிமி’, ‘கோப்ரா’, ‘ரோமியோ’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான நடிகை மிருணாளினி ரவி, தனது நீண்ட நாள் காதலரான மகாவிஷ்ணுவை பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளார். மலேசியாவின் அழகிய லங்காவி (Langkawi) தீவில் உள்ள கடற்கரை ஓரத்தில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் மிகவும் எளிமையாகவும், இனிமையாகவும் நடைபெற்றுள்ளது.
கடந்த நவம்பர் 15-ஆம் தேதி நடைபெற்ற இந்தத் திருமணத்தின் அழகான புகைப்படங்களை நடிகை மிருணாளினி ரவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதில், இளஞ்சிவப்பு நிறப் பட்டுப்புடவை மற்றும் பாரம்பரிய நகைகளில் மிருணாளினி தேவதை போல ஜொலிக்க, மணமகன் மகாவிஷ்ணு பாரம்பரிய வேட்டி, சட்டையில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். தாலி கட்டும் தருணம் மற்றும் இருவரும் அன்பைப் பரிமாறிக்கொள்ளும் நெகிழ்ச்சியான புகைப்படங்களைப் பகிர்ந்த மிருணாளினி, “வாழ்க்கையில் நான் வேண்டிய அனைத்துப் பிரார்த்தனைகளிலும் மிகவும் அழகான வரம் நீங்கள்தான்; 15.11.2026 – நாம் இருவரும் ஒன்றான நாள்” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ள இந்தப் புதுமணத் தம்பதிக்குத் திரைத்துறையினரும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். டிக்டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமாகித் தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்த மிருணாளினி ரவியின் திருமணப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.













