எஸ்.ஜி.எஸ் புரொடக்ஷன்ஸ் (SGS Productions) பேனரில் ஜி. சுரேஷ் தயாரிப்பில், ‘கூகுள் குட்டப்பா’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் குரு சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பத்து நாள் ராஜா’. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்திற்குத் தமிழில் ‘பத்து நாள் ராஜா’ என்றும், தெலுங்கில் ‘ஈகோ ராஜா’ (Ego Raja) என்றும் தலைப்பிடப்பட்டுள்ளது. பி. செந்தில் குமார் இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பால் முத்திரை பதித்து வரும் சதீஷ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகன் ஆதி சாய்குமார் ஆகியோர் இப்படத்தில் முதன்மை வேடங்களில் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் ஆதியா பிரசாத், சரண்யா ராமச்சந்திரன், கருடா ராம், ஆடுகளம் நரேன், பருத்திவீரன் சரவணன், ‘ஆதித்யா’ கதிர், ஸ்ரீரஞ்சனி மற்றும் ஆதிரா பாண்டிலட்சுமி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். தொழில்நுட்ப ரீதியாகவும் மிக வலுவான கூட்டணியுடன் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்துள்ளார். முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, மேகநாதன் படத்தொகுப்பையும், ஜி. துரைராஜ் கலை இயக்கத்தையும் கையாண்டுள்ளனர். மகேஷ் மாத்யூ, விக்கி நந்தகோபால் மற்றும் டான் அசோக் ஆகியோர் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.

திரைப்படம் குறித்துப் பேசிய இயக்குநர் குரு சரவணன், “குடும்பத்துடன் இணைந்து கண்டு ரசிக்கக்கூடிய முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘பத்து நாள் ராஜா’ உருவாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு மத்தியதர குடும்பங்களும் சந்திக்கும் ஒரு முக்கியப் பிரச்சினையை, உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் ஜனரஞ்சகமாகவும் நகைச்சுவையாகவும் இப்படத்தில் பேசியுள்ளோம். சதீஷ் மற்றும் ஆதி சாய்குமார் ஆகிய இருவரையும் ஒன்றாக இயக்கியது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. மொழிகளுக்கு அப்பாற்பட்ட இந்தக் கதைக்களத்தைத் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், ‘பத்து நாள் ராஜா’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.













