தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காகித மலர்’ (The Paper Flower) திரைப்படம் சர்வதேச அளவில் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது. ஜப்பானில் நடைபெற்ற 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் Asian Future பிரிவில் உலகத் திரையிடலுக்காக (World Premiere) இப்படம் தேர்வு செய்யப்பட்டு, இரு காட்சிகள் திரையிடப்பட்டன.
இந்த உலகத் திரையிடல் நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் திருமதி பிரேமா செழியன் மற்றும் அவரது மகள் செல்வி அதிதா செழியன் ஆகியோர் கலந்துகொண்டனர். திரையிடப்பட்ட இரண்டு காட்சிகளுமே பார்வையாளர்களால் நிரம்பி வழிந்தன. படம் நிறைவடைந்ததும் ஜப்பானிய ரசிகர்கள் அரங்கம் அதிர பலத்த கைதட்டல்களுடன் தங்கள் பாராட்டைத் தெரிவித்தனர். தொடர்ந்து நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியில் பார்வையாளர்களின் கேள்விகளுக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் படக்குழுவினர் அளித்த பதில்கள் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுப் பகிரப்பட்டன.

விழாவின் நடுவர் குழு உறுப்பினர் கென்ஜி இஷிசாகா பேசுகையில், பாலிவுட்டைத் தாண்டி இந்தியாவில் உருவாகும் தனித்துவமான உலகத்தரம் வாய்ந்த கலைப்படைப்புகளை உலகுக்குக் காட்டவே இத்திரைப்படத்தைத் தேர்வு செய்ததாகப் பாராட்டினார். மேலும் பிரபல விமர்சகர் கேட்டி ரைஃப், இப்படத்தின் இலக்கிய நயத்தையும் இனிமையையும் வெகுவாகப் புகழ்ந்துள்ளார். சர்வதேச விநியோகஸ்தர்கள் இப்படத்தை உலகளவில் வெளியிட ஆர்வம் காட்டி வரும் நிலையில், இந்த வெற்றியையும் அங்கீகாரத்தையும் இயக்குநர் செழியனின் திரைப்பாதங்களில் சமர்ப்பிப்பதாகத் தயாரிப்பாளர் பிரேமா செழியன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.













