தமிழ் சினிமாவின் காலத்தால் அழியாத கல்ட் கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ (Vinnaithaandi Varuvaayaa), இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸி இடையேயான காதலைச் சொல்லும் இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும், ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் உருவான பாடல்களும் இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரிட்டாகத் திகழ்கின்றன. தமிழ் சினிமா வரலாற்றில் காதலின் அடையாளமாக மாறிய இப்படம், திரையரங்குகளில் ரசிகர்களை ஈர்ப்பதில் இன்றும் சற்றும் குறைவில்லாமல் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில், சென்னை அண்ணா நகரில் உள்ள PVR VR மாலில் இப்படத்தின் சிறப்புத் திரையிடல் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், தற்போது இப்படம் 1700 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி புதிய சாதனை படைத்துள்ளது. 5 ஆண்டுகளை நெருங்கும் இத்தகைய தொடர்ச்சியான திரையிடல் பயணம் தமிழ் சினிமா வரலாற்றில் மிகவும் அரிதான ஒன்றாகும். இதைக் கொண்டாடும் விதமாகத் திரையரங்கில் கூடிய ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியையும் ஆரவாரத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும், வொர்க்கிங் டேஸ் மற்றும் விடுமுறை நாட்கள் என எந்தவித வித்தியாசமும் இல்லாமல், தினந்தோறும் பகல் 12:20 மணிக்கு இப்படத்தின் காட்சிகள் திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது. திரையரங்க கலாச்சாரத்தில் ஒரு படத்திற்கு கிடைக்கும் இந்த அபாரமான வரவேற்பு ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்திலும் பெரும் ஆச்சரியத்தையும் பெருமிதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.













