தமிழ் சினிமா உலகில் தற்போது மாபெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘சீன்’. நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியாகி உள்ள இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் தியேட்டர்களில் ரசிகர்களின் விசில் ஒலிகளையும் கைதட்டல்களையும் அள்ளியுள்ளன.
இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தவை இதன் பன்முகத்தன்மை கொண்ட கூர்மையான வசனங்கள்தான். இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ள இளம் எழுத்தாளர் பரிதாபங்கள் புகழ் திராவிட் செல்வம், இயக்குநர் ஜித்து மாதவனின் மலையாளச் சூழல் கதைக் களத்தை இன்றைய தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப மிகச் சிறப்பாக மாற்றியமைத்துள்ளார். குறிப்பாக, இன்றைய இளைஞர்களின் ட்ரெண்டையும், தியேட்டர் பல்ஸையும் (Audience Pulse) துல்லியமாகப் புரிந்து கொண்டு அவர் எழுதியுள்ள வரிகள் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக ஈர்த்துள்ளன.
ஒரு புதிய வரவாக களம் இறங்கி இருந்தாலும், சூர்யாவின் மாஸ் இமேஜுக்கும் படத்தின் கதைக்களத்திற்கும் ஏற்றவாறு காட்சிகளைத் தன்வசப்படுத்தும் படியான வசனங்களை அமைத்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் திராவிட் செல்வம். தற்போதைய நவீன சினிமா ரசனைக்குத் தகுந்தாற்போல எழுத்துத் திறமையை வெளிப்படுத்திய இவரின் பணிக்கு சினிமா வட்டாரங்களில் வாழ்த்துகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.













