ஐபிஎல் 2026 (IPL 2026) கிரிக்கெட் திருவிழா இன்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. ஆனால், மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தை விட, டிக்கெட் விவகாரத்தில் அரசியல்வாதிகள் காட்டும் “விஐபி கலாச்சாரம்” (VIP Culture) இப்போது ஒரு மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் பல எம்.எல்.ஏ-க்கள் தங்களுக்கு ஐபிஎல் போட்டிக்கான இலவச விஐபி பாஸ்கள் (Free VIP Tickets) முறையாக வழங்கப்படவில்லை என்றும், தங்களைச் சாதாரண பொதுமக்களுடன் வரிசையில் நிற்க வைப்பது அவமானம் என்றும் புகார் எழுப்பினர்.
இந்த விவகாரம் குறித்துச் சமூக வலைதளத்தில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ள ஐபிஎல் நிறுவனர் லலித் மோடி (Lalit Modi), அரசியல்வாதிகளை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். அவர் தனது பதிவில், “இது முற்றிலும் முட்டாள்தனமானது. அரசியல்வாதிகள் தங்களை ஏன் இவ்வளவு உயர்வாக நினைக்கிறார்கள்? ஐபிஎல் தொடரை உருவாக்கியது ரசிகர்கள் தான், இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்ல. ஆனால், இது ஏதோ தங்களின் பிறப்புரிமை போல அவர்கள் இலவச டிக்கெட் கேட்கிறார்கள்,” என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
This is absolutely complete nonsense. Why should they be privileged. It’s the fan who made the @IPL not the elected representatives. Yet they want it as their birth right. In as Asian country recently a minister was sacked for taking two free tickets from the promoter for an… https://t.co/U6kdkCvlmP
— Lalit Kumar Modi (@LalitKModi) March 27, 2026
மேலும், மற்றொரு ஆசிய நாட்டில் ஒரு அமைச்சர் வெறும் இரண்டு இலவச டிக்கெட்டுகளைப் பெற்றதற்காகப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். லலித் மோடியின் இந்தக் கருத்துக்குச் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது. சாதாரண ரசிகர்கள் ஒரு டிக்கெட்டிற்காக ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து, பல மணிநேரம் வரிசையில் நிற்கும் போது, மக்கள் பிரதிநிதிகள் இலவசமாகக் கேட்பது நியாயமற்றது எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் யு.டி. காதர், ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் 4 விஐபி டிக்கெட்டுகள் வழங்கப்பட வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டிருந்தது இந்தச் சர்ச்சைக்கு வித்திட்டது. இறுதியில், துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தலையிட்டு, ஒவ்வொரு எம்.எல்.ஏ-வுக்கும் 2 இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்காவும் (Harsh Goenka) இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ-க்களின் போக்கைக் கண்டித்துள்ளார். “சாதாரண மக்களிடம் வாக்கு கேட்டுச் செல்லும் போது இல்லாத விஐபி அந்தஸ்து, கிரிக்கெட் டிக்கெட் என்று வரும்போது மட்டும் எதற்கு?” என்ற கேள்வியைச் சமூக ஆர்வலர்கள் எழுப்பி வருகின்றனர்.
இன்று பெங்களூருவில் ஆர்சிபி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதும் முதல் போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்தத் டிக்கெட் சர்ச்சை ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு இடையே ஒரு கசப்பான சம்பவமாக மாறியுள்ளது. லலித் மோடியின் இந்தத் துணிச்சலான கருத்து, இந்தியாவில் வேரூன்றி இருக்கும் விஐபி கலாச்சாரத்திற்கு எதிரான ஒரு முக்கியக் குரலாகப் பார்க்கப்படுகிறது.













