90 காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கின்றது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வு முழுவதும் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இந்த ஆண்டில் காலியாக இருக்கும் 90 காலி பணியிடங்களுக்கான முதல் நிலை எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது.
குரூப் ஒன் தேர்வு எழுதுவதற்கு 2 லட்சத்து 38 ஆயிரத்து 255 பேர் விண்ணப்பித்திருந்தார்கள். இதில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 247 பேர் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். குரூப் ஒன் தேர்வு சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதி இருந்த நிலையில் சென்னையில் மட்டும் 37 ஆயிரம் பேர் தேர்வு எழுதி இருந்தார்கள்.
முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு முதன்மை தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடத்தப்பட்டு இட ஒதுக்கீடு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கின்றது. குரூப்-1 முதல் தேர்வு நடந்து முடிந்த 50 நாட்களில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
90 காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வை 1.59 லட்சம் பேர் எழுதி இருக்கிறார்கள். முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றது. மேலும் குரூப்-1 தேர்வுகள் வரும் டிசம்பர் 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.













