வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் உயிரிழந்த நிலையில் ஒரு நபர் மட்டும் தப்பித்து இருக்கின்றார்.
கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் பல நூறு குடும்பங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து போயினர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 380 ஐ தாண்டி இருக்கின்றது. பலர் மண்ணில் புதைந்துள்ளதால் அவர்களை தேடும் பணி தீவிர படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகின்றது.
அதிலும் சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு நிலசரிவு ஏற்பட்டதால் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாலியார் ஆற்றில் இருந்து உடல்கள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் வயநாடு நிலச்சரிவில் 42 வயதான மன்சூர் என்பவர் தனது குடும்பத்தை சேர்ந்த 16 பேரை இழந்து தவித்து வருகின்றார்.
இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் மன்சூரின் அம்மா, மனைவி, தங்கை, இரண்டு குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தாய், மனைவி, தங்கை மற்றும் மகனின் உடல்கள் மட்டுமே தற்போது வரை கிடைத்திருக்கின்றது. அவரது மகள் உள்ளிட்ட 12 பேரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இந்த நிலச்சரிவில் மன்சூர் மட்டும் வெளியூருக்கு சென்று இருந்ததால் உயிர் தப்பி இருக்கின்றார். இது குறித்து அவர் தெரிவித்த போது “இந்த நிலச்சரிவு எண் ஒட்டுமொத்த உலகத்தையும் அடித்துச் சென்று விட்டது. என் குடும்பம் என் வீடு என அனைத்தையும் இழந்து நிற்கதியாய் நிற்கின்றேன்” என்று கண்ணீருடன் தெரிவித்து இருந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.







