2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு அதிரடி தகவல் தீயாய் பரவி வருகிறது. தமிழக வெற்றி கழகத் தலைவர் தளபதி விஜய், முதல்முறையாக ஒரு தனியார் தொலைக்காட்சியில் நேரடி பேட்டி அளிக்க உள்ளதாக வதந்திகள் கிளம்பியுள்ளன. அதாவது, வரும் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘மக்கள் நாயகன்’ என்ற தலைப்பில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை விஜய் தோன்றி பேசப்போவதாக ஒரு செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இது விஜய்யின் அரசியல் பயணத்தில் மிக முக்கியமான ஒரு நகர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இந்த தகவல் குறித்து இன்னும் சேனல் தரப்பிலிருந்தோ அல்லது தவெக தரப்பிலிருந்தோ எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. பொதுவாக தனது படங்களுக்கு கூட பேட்டி அளிக்காத விஜய், தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு அதிரடி முடிவை எடுப்பாரா? என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும், புதிய வாக்காளர்களை கவர இது ஒரு நல்ல வழியாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர்.
சேனல் தரப்பில் இருந்து இன்னும் ப்ரோமோவோ அல்லது அறிவிப்போ வெளியாகவில்லை. இதனால் இது வெறும் வதந்தியா? அல்லது சர்ப்ரைஸ் பிளானா? என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும். தற்போது விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் தீவிரமாக களம் இறங்கியுள்ளதால், இந்த டிவி பேட்டி நடந்தால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. எதுவாக இருந்தாலும் அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.













