தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சித் தொண்டர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து சமூகவலைதளத்தில் புகைப்படம் பதிவிட சொல்லி அறிவுரை வழங்கியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவால் 22,000 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வரும் நிலையில் மக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வலியுறுத்தி வருகின்றனர். அதில் முக்கியமாக சானிட்டைசர் கொண்டு கை கழுவது, மாஸ்க் அணிவது கட்டாயம் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேமுதிக கட்சி தலைவர் கேப்டன் விஜயகாந்த், தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு புதிய அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். அதில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் முக கவசம் அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிரவும், டிபியாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







