சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘அமரன்’ திரைப்படத்தின் உருவாக்கம், ரிலீஸ் சவால்கள் மற்றும் அதன் பின்னணியில் இருந்த உணர்வுப்பூர்வமான தருணங்கள் குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தற்போது மனம் திறந்து பேசியுள்ளார்.
இப்படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் நீண்ட காலம் நடைபெற்றதாகவும், சிவகார்த்திகேயன் தனது முந்தைய இரண்டு படங்களை முடித்துவிட்டு இதில் இணைந்த பிறகு, படப்பிடிப்பு தொடங்கி சுமார் 16 மாதங்கள் இந்தப் பயணம் நீடித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். சோனி பிக்சர்ஸ் போன்ற பெரிய நிறுவனம் இணைந்திருந்தபோதிலும், படத்தின் வெளியீட்டுத் தேதியை இறுதி செய்வதில் பெரும் சவால்கள் இருந்ததை அவர் நினைவுகூர்ந்துள்ளார். அனைவரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி படத்தை வெளியிட விரும்பிய நிலையில், ‘கோட்’ (GOAT) படத்தின் வருகை மற்றும் ‘விடாமுயற்சி’ படத்தின் ரிலீஸ் குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாகத் தேதி தள்ளிப்போய், இறுதியாக அக்டோபர் 31 தீபாவளி வெளியீடாக ‘அமரன்’ திரைக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறாக இப்படம் இருந்தாலும், வெளிநாடுகளில் வசிப்பவர்கள், நீண்ட தூரக் காதலில் இருப்பவர்கள் மற்றும் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் எனப் பலரும் இப்படத்துடன் தங்களை உணர்வுப்பூர்வமாக இணைத்துக்கொண்டதாக ராஜ்குமார் பெரியசாமி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
தாம்பரத்திலிருந்து காஷ்மீருக்குச் சென்று, அங்குள்ள சூழலில் வாழ்ந்து, தனது 30-வது வயதிலேயே நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ஒரு வீரனின் கதையை எந்தவொரு சார்பும் இல்லாமல், தான் உணர்ந்த தாக்கத்தைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாகப் பார்வையாளர்களுக்குக் கடத்த விரும்பியதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம்தான் சென்னையிலேயே அதிகாரிகள் பயிற்சி அகாடமி (OTA) இருப்பதைத் தான் அறிந்துகொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், மேஜர் முகுந்த் மற்றும் இந்து ஆகியோரின் காதல் குறித்து அவர்களிடம் நேரடியாகக் கேட்பது உணர்வுப்பூர்வமாகத் தவறாக இருக்கும் எனக் கருதியதால், அவர்களின் தனிப்பட்ட உரையாடல்களைத் தோண்டாமல், முக்கிய மைல்கற்களையும் திருமண நிகழ்வுகளையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சினிமாவுக்கான சுதந்திரத்துடன் திரைக்கதையை அமைத்ததாக அவர் விளக்கியுள்ளார்.
குறிப்பாக, மேஜர் முகுந்த் வீரமரணம் அடைந்த நாளில் தொலைக்காட்சியில் வெளியான ஒரு வீடியோவில், பதக்கம் பெறும் விழாவின் போது தனது இரண்டரை வயது மகளுடன் அமர்ந்து ‘அச்சமில்லை அச்சமில்லை’ பாடலை அவர் பாடிய காட்சி தன்னை மிகவும் பாதித்ததாகவும், வளர்ந்த பிறகு அந்தக் குழந்தைக்குத் தந்தையின் முக்கிய நினைவாக இருக்கப்போகும் அந்தத் தருணமே தன்னை இந்த பயோபிக் திரைப்படத்தை இயக்கத் தூண்டியதாகவும் ராஜ்குமார் பெரியசாமி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.













