தமிழ் திரையுலகில் எப்போதும் வித்தியாசமான பிஸ்னஸ் வியூகங்களைக் கையாள்வதில் வல்லவரான நடிகர் அஜித் குமார் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஏ.எல். விஜய் இயக்கத்தில் அஜித் தனது மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியுள்ள ‘கிளாடியேட்டர்ஸ்’ (Gladiators) என்ற டாக்குமெண்டரி படத்தின் மீது தற்போது கோலிவுட்டின் பார்வை திரும்பியுள்ளது.
இப்படத்தின் திரையரங்க வெளியீட்டிற்காகத் தமிழ்நாட்டு விநியோகஸ்தர்களை அணுகியபோது, நேரடி வாங்குதலுக்குப் பதிலாக கமிஷன் அடிப்படையில் வெளியிடவே அவர்கள் ஆர்வம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் விழிப்புடன் செயல்பட்ட அஜித் தரப்பு, ஜியோ மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் போன்ற முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் நெகட்டிவ், தியேட்டரிக்கல், ஓடிடி மற்றும் சாட்டிலைட் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் ஒட்டுமொத்தமாக ஒரே ஒரு மொத்தத் தொகைக்கு (Upfront Lump Sum Amount) விற்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த விற்பனை மூலம் கிடைக்கும் லாப மற்றும் முதலீட்டுத் தொகையை, தனது மனைவியும் நடிகையுமான ஷாலினியின் பிரேவ்ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் (Bravehearts Production) பேனரில் தானே சொந்தமாகத் தயாரிக்கவுள்ள ‘டேர்டெவில்’ (Daredevil) திரைப்படத்திற்கு மூலதனமாகப் பயன்படுத்த அஜித் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இந்த நிதித் திட்டம் சினிமா வர்த்தக வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.





