மருத்துவ மாஸ்க்குகள் இல்லாமல் மருத்துவர்கள் அவதிப்படுவதால் மக்கள் அந்த மாஸ்க்குகளை அதிகமாக வாங்கவேண்டாம் என நடிகர் விஜய் தேவார்கொண்டா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலால் இந்தியாவில் 4700 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 124 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 300 க்கும் மேற்பட்டவர்கள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மக்கள் பீதி காரணமாக என் 95 உள்ளிட்ட மருத்துவ மாஸ்க்குகளை அதிகளவில் வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் இளம் நடிகரான விஜய் தேவாரகொண்டா தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘என் அன்பிற்குரியவர்களே… எல்லோரும் நலமாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன். துணிகளால் செய்த மாஸ்க்குகளே கூட இந்த வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பதில் உதவும் என சொல்லப்படுகிறது. அதனால் மருத்துவ (N95) மாஸ்க்குகளை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்காக விட்டுவிடுங்கள். வெறும் கர்ச்சீஃப், துணி அல்லது துப்பட்டாவால் செய்த மாஸ்க்குகளைப் பயன்படுத்துங்கள். ’ எனத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மருத்துவர்கள் சங்கம் மாஸ்க்குகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் நோயாளிகளை அனுக வேண்டியுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னால் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.








