இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘மகாராஜா’ (Maharaja) திரைப்படம், இந்தியாவைத் தாண்டி சர்வதேச அளவிலும் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது. நியூயார்க்கில் நடைபெற்ற 54-வது சர்வதேச எம்மி விருது (International Emmy Awards) விழாவில் விருது வழங்குவதற்காகப் பங்கேற்ற விஜய் சேதுபதி, ‘மகாராஜா 2’ மற்றும் ‘மகாராஜா’ ஹாலிவுட் ரீமேக் குறித்து உற்சாகமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், சர்வதேச டெலிவிஷன் கலை மற்றும் அறிவியல் அகாடமியின் (International Academy of Television Arts & Sciences) வாரிய உறுப்பினரான கவிதா குப்தா, ஹாலிவுட் ஜாம்பவான் டாம் ஹாங்க்ஸ் ‘மகாராஜா’ படத்தைப் பார்த்துப் பாராட்டிய சுவாரசிய அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து கவிதா குப்தா கூறுகையில், “இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற LACMA விழாவில் டாம் ஹாங்க்ஸைச் சந்தித்தபோது, இந்தியாவிலிருந்து எந்த மூன்று திரைப்படங்களைப் பார்க்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார். நான் ‘மகாராஜா’ படத்தைப் பார்க்குமாறு பரிந்துரைத்தேன். சில வாரங்களுக்குப் பிறகு, நவம்பர் 7-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது LACMA Art Film விழாவில் அவரை மீண்டும் சந்தித்தபோது, அவர் என்னிடம் சொன்ன முதல் வார்த்தை, ‘அந்தப் பெண்ணின் நடிப்பிலிருந்து என்னால் இன்னும் மீள முடியவில்லை… என்னவொரு அற்புதமான நடிகை! என்னால் அப்படிச் செய்திருக்க முடியாது; நான் அந்த நபரைக் கொன்றிருப்பேன்’ என்பதுதான்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், சர்வதேச எம்மி விருது விழா நிகழ்வில் பேசிய விஜய் சேதுபதி, தனது சமீபத்திய படமான ‘பத்தா’ (Baththa) தனக்கு மிகவும் பிடித்தமான படம் என்றும், ‘மகாராஜா’ திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், “‘மகாராஜா’ ஹாலிவுட் ரீமேக்கில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு மிகவும் ஆசை என்று எனது தயாரிப்பாளரிடம் கூறியுள்ளேன். அவர்கள் எனக்கு ஒரு கதாபாத்திரத்தை வழங்கினால், கண்டிப்பாக மகிழ்ச்சியுடன் நடிப்பேன். ஒவ்வொரு நாளும் சாதாரண நாளாகத்தான் தொடங்குகிறது, ஆனால் அது எப்படி முடியும் என்று நமக்குத் தெரியாது. இந்த ஆண்டு எனக்குப் பல ஆச்சரியங்கள் கிடைத்தன! நித்திலன் ஒரு சிறந்த இயக்குநர், அவரது எழுத்துத் திறமை மிகவும் சிறப்பானது. சமீபத்தில் அவர் எனக்கு ‘மகாராஜா 2’ கதையைச் சொன்னார், அது மிகவும் அழகாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
சர்வதேச அரங்கில் விஜய் சேதுபதி பகிர்ந்துள்ள இந்த இரட்டை அறிவிப்புகள், ‘மகாராஜா 2’ மற்றும் அதன் ஹாலிவுட் பதிப்பு குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே பலமடங்கு அதிகரித்துள்ளது.













