தமிழ் சினிமாவின் வித்தியாசமான கதைத்தேர்வுகளுக்குப் பெயர் பெற்ற நடிகர் விஜய் ஆண்டனி, தனது படங்களுக்கான வித்தியாசமான விளம்பர யுக்திகளால் எப்போதும் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகும் தனது படத்தின் விளம்பரத்திற்காக நடிகை ப்ரீத்தி அஸ்ரானியுடன் இணைந்து ஹைதராபாத் வீதிகளில் அவர் நடத்திய புரமோஷன் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
நவம்பர் 27-ஆம் தேதி வெளியீட்டை முன்னிட்டு ஹைதராபாத் நகரில் படக்குழுவினர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். விஜய் ஆண்டனி மற்றும் ப்ரீத்தி அஸ்ராணி ஆகியோர் சாலையோரப் பகுதிகளில் நடந்து சென்று பொதுமக்களையும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தினர்.
அப்போது அங்கிருந்த ஒரு சிற்றுண்டி கடையில் நுழைந்த விஜய் ஆண்டனி, யாரும் எதிர்பார்க்காத வகையில் தானே கையில் எடுத்து சூடான மிளகாய் பஜ்ஜிகளைப் போட்டுக் கொடுத்தார். சாதாரண மனிதரைப் போல அவர் பஜ்ஜி சுட்ட காட்சியைக் கண்ட ரசிகர்களும் அங்கிருந்தவர்களும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
View this post on Instagram
தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை ஒரே நேரத்தில் கவரும் வகையில் இந்த இருமொழி வெளியீடு திட்டமிடப்பட்டிருப்பதால், ஹைதராபாத் புரமோஷன் படத்திற்குப் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. விஜய் ஆண்டனி பஜ்ஜி போடும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.













