தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் (AGS Entertainment) தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் மற்றும் நடிகர் ஜெய் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வத் தலைப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதுவரை ‘ஏஜிஎஸ் 29’ (AGS 29) என அழைக்கப்பட்டு வந்த இந்த விறுவிறுப்பான இன்வெஸ்டிகேஷன் திரில்லர் திரைப்படத்திற்கு ‘ரெட் ஐ’ (Red Eye) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ‘சக்ரா’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் இந்தப் படத்தை எழுதி இயக்கி வருகிறார். பிரியங்கா மோகன் மற்றும் ஜெய்யுடன் நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்ட இப்படத்திற்கு, ‘கே.ஜி.எஃப்’ மற்றும் ‘சலார்’ புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் இ. ராகவ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார்.
வழக்கமான கமர்ஷியல் கதைகளிலிருந்து மாறுபட்டு, கடைசி நிமிடம் வரை சஸ்பென்ஸ் நிறைந்த ஒரு இன்வெஸ்டிகேஷன் திரில்லராக ‘ரெட் ஐ’ உருவாகி வருவதால், பிரியங்கா மோகன் மற்றும் ஜெய் கூட்டணியின் இந்தப் புதிய முயற்சி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.













