தனது தனித்துவமான குரலாலும் மிரட்டலான நடிப்பாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இவர் முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம் ‘ஜான் டோ’ (John Doe). ‘வல்லமை தாராயோ’ மற்றும் ‘கே.டி’ (K.D.) ஆகிய படங்களை இயக்கிய பெண் இயக்குநர் மதுமிதா இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். ‘பாகுபலி’ படத்தைத் தயாரித்த அர்கா மீடியா ஒர்க்ஸ் (Arka Mediaworks) சார்பில் ஷோபு யார்லகட்டா மற்றும் பிரசாத் தேவினேனி ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
இப்படம் நாளை (நவம்பர் 13) உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இப்படத்தைப் பாராட்டித் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், அர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் ‘ஜான் டோ’ போன்ற ஒரு வித்தியாசமான கதைக்களத்தை ஆதரித்து தயாரித்திருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். யாரென்றே தெரியாத ஒரு நபரைத் தேடும் ஒரு காவல்துறை அதிகாரியின் கதை என்பது மிகவும் சுவாரசியமான சிந்தனையாக உள்ளது என்றும் அவர் புகழ்ந்துள்ளார்.
Happy to see @arkamediaworks backing a story like #JohnDoe. A cop searching for someone nobody knows… such an intriguing idea. @iam_arjundas looks intense as Chandru. All the best to @memadhumita @Shobu_ @devineni_prasad and the entire team.
https://t.co/vvKoyoiSUd— rajamouli ss (@ssrajamouli) November 12, 2026
மேலும், இப்படத்தில் சந்துரு எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அர்ஜுன் தாஸின் தோற்றம் மிகவும் தீவிரமாகவும் மிரட்டலாகவும் இருப்பதாக ராஜமௌலி பாராட்டியுள்ளார். இயக்குநர் மதுமிதா, தயாரிப்பாளர்கள் ஷோபு யார்லகட்டா, பிரசாத் தேவினேனி மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார். சஞ்சனா நடராஜன் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார். படம் வெளியாவதற்கு முன்பே ராஜமௌலியின் இந்தப் பாராட்டு கிடைத்திருப்பது படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.













