மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகரான நிவின் பாலி, மமிதா பைஜு மற்றும் சங்கீத் பிரதாப் உள்ளிட்டோர் நடிப்பில், இயக்குநர் ஏ.டி. கிரிஷ் (A.D. Girish) இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ (Bethlehem Kudumba Unit). திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்று வரும் இத்திரைப்படத்தை, கேரள முதல்வர் வி.டி. சதீசன் தனது மகளுடன் பார்த்துள்ளார்.
திரைப்படம் பார்த்த அனுபவம் குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மிக நீளமான மற்றும் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வி.டி. சதீசன் பகிர்ந்துள்ளார். அதில், “பணிச் சுமைகள் காரணமாக மாதத்திற்கு ஒரு படம் பார்ப்பது கூட எனக்கு முடங்கிப்போயிருந்தது. ஆனால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று எனது மகளுடனும் அவரது தோழியுடனும் ஒரே மூச்சில் பார்த்த திரைப்படம்தான் ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’. படம் மிகவும் அற்புதம்!” என்று தெரிவித்துள்ளார்.
படத்தின் மேக்கிங் மற்றும் கதை நகர்த்தும் விதத்தைப் பாராட்டிய அவர், “படத்தின் ட்ரீட்மென்ட் (Treatment) தான் இதை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டுகிறது. கொஞ்சம் கூட சலிப்பே ஏற்படவில்லை. எனது இளமைக் காலத்து கிராமத்து வாழ்க்கையோடு என்னால் உடனடியாகக் கனெக்ட் செய்ய முடிந்தது. அன்று நாங்கள் பார்த்த கிராமங்கள், அங்கு வாழ்ந்த மனிதர்கள், அவர்களின் எளிய வாழ்க்கை, மனிதர்களுக்கு இடையேயான அன்பு மற்றும் அழகான காதல் என அனைத்தும் இப்படத்தில் நெஞ்சைத் தொடும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ‘ஐயோ! இப்படத்தை பார்க்க இவ்வளவு தாமதமாகிவிட்டதே’ என்றுதான் படம் முடிந்ததும் தோன்றியது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
நாயகன், நாயகி தவிர்த்து ஓரிரு காட்சிகளில் வரும் கதாபாத்திரங்கள் கூட தங்களின் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது ஒரு முழுமையான ‘டீம் வொர்க்’ (Complete Team Work) என்று பாராட்டியுள்ளார். மேலும், “வழக்கமாக நான் படம் பார்த்துவிட்டு சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுதுவது இல்லை. ஆனால், இந்தப் படம் என் மனதை மிகவும் புத்துணர்ச்சி (Refresh) பெற வைத்ததால் எழுதத் தோன்றியது. இயக்குநர் ஏ.டி. கிரிஷ் மற்றும் நடிகர் சங்கீத் பிரதாப் ஆகிய இருவரையும் போனில் அழைத்து எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். நிவின் பாலி மற்றும் மமிதா பைஜுவை போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. இவர்களுடன் சேர்த்து ‘க்ளிக்சன்’ (Glikson) என்ற கதாபாத்திரமும் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. பாவப்பட்ட க்ளிக்சன்!” என நெகிழ்ந்து வாழ்த்தியுள்ளார்.
படம் பார்த்த கையோடு கேரள முதல்வர் வி.டி. சதீசன் இயக்குநரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்தியிருப்பது ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.













