பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட புதிய பயோபிக் படத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா (Launch Event) சென்னை தி நகரில் உள்ள மியூசிக் அகடமியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இயக்குனர் கௌதம் திண்ணனுரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட உலகநாயகன் கமல் ஹாசன் முதல் கிளாப் அடித்துப் படத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய இயக்குநர் கௌதம் திண்ணனுரி, கடந்த ஒரு ஆண்டாக தங்களுடன் எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் பெயர் எங்களின் பயணமாகவே கலந்துவிட்டதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய நடிகர் கமல் ஹாசன், இசையமைப்பாளர் அனிருத்தின் தற்போதைய இசைப் பயணம் குறித்துக் குறிப்பிடுகையில், கே.பாலச்சந்தர் இயக்கிய ‘அரங்கேற்றம்’ படமும், கே.விஸ்வநாத் இயக்கத்தில் வெளியான ‘சங்கராபரணம்’ படமும் எப்படி அவர்களது திரைப் பயணத்தைத் திருப்பியமைத்ததோ, அதேபோல் இப்படம் அனிருத்தின் இசைப் பயணத்திற்கும் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் எனத் தான் நம்புவதாகவும், அதனை அனிருத்திடம் தெரிவிக்குமாறும் கூறினார்.
View this post on Instagram
மேலும், தென்னிந்தியாவின் சினிமா மையமாகச் சென்னையைத் தாண்டி பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தும் வளர்ந்து வருவதைக் குறிப்பிட்ட கமல், நாம் அனைவரும் திராவிடக் குடும்பத்தின் ஒருங்கமைந்த பகுதியாகவும், மொழி எல்லைகளைத் தாண்டிய சக்தியாக இசை விளங்குவதாகவும் தெரிவித்தார்.
இத்திரைப்படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் ராஷ்மிகா மந்தனா குறித்துப் பேசுகையில், “நான் உங்களை ஒருபோதும் பொறாமைப்பட மாட்டேன்; ஏனென்றால் தாடி கழட்டினாலும் என்னால் இந்த வேடத்தில் நடிக்க முடியாது, எனக்கு நடுக்கம் ஏற்படும். எனவே இதைத் தைரியமாகச் செய்யுங்கள்” என்று வாழ்த்தி ஊக்கப்படுத்தினார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே சினிமா வட்டாரத்தில் உச்சத்தைத்தொட்டுள்ளது.













