இந்தியத் திரையுலகின் ஆகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான மணி ரத்னம், தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பிற்காக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மற்றும் ‘நேச்சுரல் லேடி ஸ்டார்’ சாய் பல்லவி ஆகியோருடன் கைகோர்த்துள்ளார். பல வாரங்களாக நிலவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்தப் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது ரசிகர்களிடையே இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி இறுதியில் இந்தப் படம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கினாலும், தற்போது மார்ச் 2026-ல் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இருவரும் இந்தப் படத்தில் இணைவதை உறுதி செய்துள்ளனர். ‘செக்கச் சிவந்த வானம்’ படத்திற்குப் பிறகு மணி ரத்னம் மற்றும் விஜய் சேதுபதி இணையும் இரண்டாவது படம் இதுவாகும். அதேசமயம், சாய் பல்லவி முதன்முறையாக மணி ரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது ஒரு பக்கா ‘ரோமாண்டிக் என்டர்டெய்னர்’ (Romantic Entertainer) படமாக இருக்கும் என்று திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
View this post on Instagram
இசைத் துறையில் மணி ரத்னம் – ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி என்பது கடந்த 34 ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவின் பிரிக்க முடியாத அங்கமாக இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு மணி ரத்னம் தனது அடுத்த படத்திற்குப் இளம் இசையமைப்பாளர்களை நாடப்போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. ஆனால், இப்போது 19-வது முறையாக இந்த மேஜிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்திற்கான பாடல்கள் அமைக்கும் பணியை ரஹ்மான் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், இரண்டு பாடல்கள் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
லைகா புரொடக்க்ஷன்ஸ் (Lyca Productions) மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் (Madras Talkies) ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் பிரம்மாண்டமான திட்டத்தைத் தயாரிக்கின்றன. லைகா நிறுவனம் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் மணி ரத்னத்துடன் இணைவது கோலிவுட்டில் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ மற்றும் ‘தக் லைஃப்’ படங்களுக்குப் பிறகு மணி ரத்னம் மீண்டும் ஒரு காதல் கதையைத் கையில் எடுத்திருப்பது அவரது பழைய ‘மௌன ராகம்’ மற்றும் ‘அலைபாயுதே’ ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி தற்போது ‘பாக்கெட் நாவல்’ மற்றும் ‘ஸ்லம் டாக்’ போன்ற படங்களில் பிஸியாக இருந்தாலும், மணி ரத்னத்தின் படத்திற்காகத் தனது தேதிகளை ஒதுக்கியுள்ளார். அதேபோல், சாய் பல்லவி தற்போது ‘ராமாயணம்’ படத்தில் சீதையாக நடித்து வருகிறார். இவர்கள் இருவரது கால்ஷீட்களும் ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என்பதால், இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 2026-ல் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதியின் எதார்த்தமான நடிப்பும், சாய் பல்லவியின் வசீகரமும் மணி ரத்னத்தின் காட்சியமைப்பில் எப்படி வரப்போகிறது? என்பதைப் பார்க்க ரசிகர்கள் இப்போதே ஆர்வமாக உள்ளனர். இந்தப் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை என்றாலும், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்களை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.













