டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு 11 துறைகள் இணைந்து நடவடிக்கை எடுக்க இருப்பதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்து இருக்கின்றார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 11 துறைகள் இணைந்து இன்று ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனைக்குப் பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருந்ததாவது: “தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை 11 ஆயிரத்து 143 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்றது.
இறப்பு விகிதம் கடந்த ஆண்டுகளை விட மிகவும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த ஆண்டு வெறும் 4 பேர் மட்டுமே இறந்துள்ளார்கள். இதற்கு முன்பு 2012 ஆம் ஆண்டு 66 பேரும், 2017 ஆம் ஆண்டு 65 பேரும் உயிரிழந்தனர். அரசு எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக டெங்குவை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்த முடிந்திருக்கின்றது.
டெங்கு பாதித்தவர்களுக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையினால் இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் பருவ மழை காலங்களில் பரவும் நோய்களான வயிற்றுப்போக்கு, டைபாய்டு, மஞ்சள் காமாலை, எலி காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதற்கு 4,676 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைத்து கண்காணிக்கப்படுகின்றது.
அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளும் பரிசோதனை கருவிகளும் கையிருப்பில் இருக்கின்றன. கொசு உற்பத்தியை தடுப்பதற்கு அனைத்து பகுதிகளிலும் மருந்துகள் தெளிப்பது, புகையடிப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றது. இதற்கு தேவையான மருந்துகளும் எந்திரங்களும் கையிருப்பில் இருக்கின்றன” என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.













