தமிழகத்தில் நாளை 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை அதாவது சனிக்கிழமை 19 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. பல இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனை தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களாக தமிழகத்தில் சில இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய தொடங்கி இருக்கின்றது.
அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னையில் குளுமையான சூழல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக நாளை முதல் தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழையும் சில இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது.
அதன்படி நாளை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது.
கனமழை காரணமாக தமிழகத்திற்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கன மழை பெய்யக்கூடிய பகுதிகளில் ஆறு முதல் 11 சென்டிமீட்டர் மழை பெய்யும் என்றும் இதன் தொடர்ச்சியாக வருகிற இரண்டாம் தேதி வரை மழைக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.













