கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என தனிமைப்படுத்தப்பட்ட பெண் ஒருவர் அங்கிருந்து தப்பி ரயிலில் பயணம் செய்தது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
பிப்ரவரி மாதம் பெங்களூரில் வேலை பார்க்கும் மென்பொறியாளர் ஒருவருக்கும், ஆக்ராவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் ஆகியுள்ளது. இருவரும் தேனிலவு கொண்டாட இத்தாலி சென்றுள்ளனர். திரும்பி வந்த பிறகு அந்த பொறியாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரது புதுமனைவியும் பெங்களூரில் தனிமைப்படுத்தப்பட்டார். அங்கிருந்து தப்பித்த அந்தப்பெண், டெல்லிக்கு விமானத்தில் சென்று, டெல்லியில் இருந்து ஆக்ராவிற்கு இரயிலில் சென்றுள்ளார்.
சுகாதாரத் துறை அலுவலர்கள் ஆக்ரா சென்று பார்த்த போது, அவரது குடும்பத்தினர் சுகாதார அலுவலர்களுடன் சண்டை இட்டு திருப்பி அனுப்பியுள்ளனர். பிறகு போலிஸ் உதவியுடன் அப்பெண்ணை மீட்டு சோதித்துப் பார்த்ததில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மாதிரியான சுயநலமிக்க செயல்களால் தான் பலரின் உயிருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. அவருடன் விமானத்தில், இரயிலில் பயணித்த சர்க்கரை நோயுடைய வயதான நபர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள். எவரோ ஒருவரின் சுயநலத்திற்கு இவர்களது உயிர் ஆபத்தில் உள்ளது.
இந்நிகழ்வில் இருந்து கற்றுக் கொள்ளப்படும் பாடங்கள்:
1. வயதானவர்கள், மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சுரணையற்ற சுயநலமிக்க மனிதர்கள் வாழும் நாடு இது.
- தனிமைப்படுத்தப்பட்ட பின்னரும் பொதுவெளியில் திரிபவர்கள், மருத்துவமனையில் பயண விவரங்களை மறைப்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
என மருத்துவரும் எழுத்தாளருமான சென் பாலன் பதிவு செய்துள்ளார். இதனால் இது போல அலட்சியமாக இருப்பவர்களைக் கண்டிக்கும் விதமாக கண்டனங்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.







